தள்ளாதே! - வெற்றிக்கு ஒரு புத்தகம் !
இப்போது, உங்களுக்கு ஒரு சின்னப் பரீட்சை. இந்தக் கொஸ்டின் பேப்பரில் மொத்தம் பத்துக் கேள்விகள் இருக்கும். அதில் ஒன்பது கேள்விகள் சுலபமானவை, பத்தாவது கேள்வி கஷ்டமானது. நீங்கள் எதை முதலில் எழுதுவீர்கள் ?
நம்மில் பெரும்பாலானோர் சுலபமான கேள்விகளைத்தான் முதலாவதாக எழுதி முடிப்போம். அதன்பிறகு கடைசியாக அந்தக் கஷ்டமான கேள்விக்கு வருவோம்.
இது பரீட்சையில் சரிப்படும். நிஜ வாழ்க்கையில் ?
மேலே பார்த்த அதே பரீட்சை. ஆனால், பத்துக்கேள்விகளுக்குப் பதிலாக, இங்கே பத்து வேலைகள். அவற்றில் ஒன்றுமட்டும் கஷ்டமானது. நீங்கள் எதை முதலில் செய்வீர்கள் ?
நூற்றுக்குத் தொண்ணுற்றொன்பது பேர் அந்தக் கஷ்டமான வேலையை "அப்புறமாகப் பார்த்துக்கலாம்' என்று தள்ளிப்போடுவார்கள். மற்ற சுலபமான வேலைகளை உடனே செய்து முடித்து திருப்தி அடைவார்கள்.
ஆனால், பரீட்சைக்கும் இதற்கும் முக்கியமான வித்தியாசம், அங்கே கஷ்டமான கேள்வியைத் தவறவிடுகிற ஒரு மாணவன், தேர்வு முடிவதற்குள் அதற்குத் திரும்பி வருவான். அந்தக் கேள்விக்குச் சரியாக பதில் எழுதி மார்க் வாங்கிவிடுவான்.
நிஜ வாழ்க்கையில் அப்படி நடப்பதில்லை. சிரமம் என்று நினைத்துத் தளளிப்போடுகிற ஒரு வேலையை, அத்தனை சுலபத்தில் நாம் மீண்டும் எடுத்துச் செய்வதே கிடையாது. காரணம், இன்னும் இன்னும் சுலபமான வேறு வேலைகள் குறுக்கிடும். மனம் அதில்தான் போகும். கஷ்டமான வேலையை எடுத்துச் செய்யத் தோன்றாது.
"தள்ளிப்போடுதல்' என்பது கொடுமையான ஒரு வியாதி. அதைச் சீக்கிரத்தில் குணப்படுத்திக்கொள்ளாவிட்டால், நம்முடைய நேரம் ஓடும், ஆனால் நாம் எங்கேயும் ஓடாமல், முன்னேறாமல் அதே இடத்தில்தான் நிற்போம். இந்த உண்மையை நகைச்சுவையோடு விளக்கிச் சொல்லுகிற ஒரு சுவாரஸ்யமான புத்தகம் "ஈட் தட் ஃப்ராக்' (Eat That Frog). எழுதியவர், ப்ரயன் ட்ரேஸி!
ஃப்ராக் ? தவளைக்கும் தள்ளிப்போடுவதற்கும் என்ன சம்பந்தம்?
"உங்கள்முன்னே தட்டில் அறுசுவை உணவு இருக்கிறது. அதற்கு மத்தியில் ஒரு தவளையும் இருக்கிறது. உவ்வே, அதைப்போய் யார் சாப்பிடுவார்கள்? ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு மற்ற ஐட்டங்களை ஒரு கட்டு கட்டுகிறீர்கள்!''
"கஷ்டமான வேலை' என்பதும் ஓர் அருவருப்பான தவளையைப்போல்தான் நமக்குத் தோன்றுகிறது. அதைத் தள்ளிப்போட்டுவிட்டால் நம் வாழ்க்கை ஆனந்தமயமாக இருப்பதுபோல் எண்ணுகிறோம்.
உண்மையில் அது ஒரு மாயை. நீங்கள் தள்ளிப்போடும் அந்த முக்கியமான வேலைதான் தனிப்பட்ட வளர்ச்சியில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை, முன்னேற்றத்தைக் கொண்டுவருகிற விஷயமாக இருக்கும்.அதைத் தள்ளிப்போடுவதன்மூலம் உங்களுடைய வளர்ச்சிக்கு நீங்களே தடை போட்டுக்கொள்கிறீர்கள் என்பதுதான் நிஜம்.
ஆகவே, "அறுசுவை உணவு கிடக்கட்டும், முதலில் அந்தத் தவளையைச் சாப்பிடுங்கள்' என்று வலியுறுத்திகிறார் ப்ரயன் ட்ரேஸி. ஆரம்பத்தில் இது ஒரு கஷ்டமான விஷயமாகத் தோன்றலாம். ஆனால் போகப்போக சிரமமான வேலைகளைச் செய்து முடிக்கிற சவால் உங்களுக்குப் பிடித்துவிடும். அவற்றை உடனுக்குடன் செய்வதால் கிடைக்கும் பெரிய பலன்கள் புரிய ஆரம்பிக்கும்!
இப்போது இன்றைக்கு நீங்கள் செய்ய நினைத்திருக்கும் வேலைகளை ஒரு பட்டியல் போடுங்கள். அதில் "தவளை' எது என்று யோசியுங்கள். அதை முதலில் செய்யுங்கள். அதனால் கிடைக்கும் மனத்திருப்தியை அனுபவியுங்கள்!
-என்.சொக்கன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment