Thursday, August 27, 2015

இளநீர் ஏற்றுமதி செய்வது எப்படி

கடந்த மாதம் மதுரையில் உள்ள டாக்டர் கோ.நம்மாழ்வார் N.R.S.L.T. அறக்கட்டளைச் சென்றிருந்தேன். அங்கு அதன் செயலாளர் கரிகாலனை சந்தித்தேன். துபாய் நாட்டுக்கு வியாபார நிமித்தம் சென்று வருபவர் ஆவர். கரிகாலன் சொன்னார் வெளிநாட்ட வர்கள் பாட்டிலில் அடைத்து வரும் இளநீரை, எவ்வளவு சுவையாக இருந்தாலும் விரும்பிக் குடிக்க விரும்புவதில்லை. இங்கிருந்து சீவி சிறியதாக வரும் இளநீரை, சிறு ஓட்டை போட்டு, குளிர்ச்சியாக ஸ்டிரா போட்டு குடிப்பார்கள். ரூ.250 (இந்திய ரூபாய்) விலை வரை துபாயில் போகிறது. அந்த வகையில் இளநீரை 4 பக்கமும் சீவி சிறியதாக மாற்றித் தரும் மெஷின் எங்கு கிடைக்கும் என கேட்டார்.
அதன் பின் கொச்சி சென்றிருந்தேன். பஸ் நிலையத்தில் "தென்னை வளர்ச்சி வாரியம்'' Coconut Development Board உடைய விற்பனை மையத்தில் வாங்கிக் குடித்தேன். மரத்தில் இருந்து வெட்டிக் குடித்ததை போல் மிக சுவையாக இருந்தது. விசாரணை செய்தேன். கேரளாவில் இருந்து ஏராளமான கோடி ரூபாய் விலையுள்ள இளநீர் ஏற்றுமதி ஆவதாக தெரிவித்தார். தாய்லாந்து நாட்டில் இருந்து ஏராளமான இளநீர் ஏற்றுமதி ஆவதை அறிந்தேன். இளநீர் குலைகளை மொத்தமாக அனுப்பினால், விரைவில் கெட்டு விடுகிறது. எனவே இளநீரில் வெளிப்பகுதியை, தோல் சீவும் இயந்திரம் மூலம் சிறிதாக்கி, நன்கு கழுவி, பாலிதீன் கவரில் ஒட்டி, சீதோஷ்ண சம நிலையுள்ள கன்டெய்னர்கள் மூலம் அனுப்புகின்றனர்.
சில நாடுகளில் இளநீரை விஸ்கி, பிராந்தியில் தண்ணீருக்கு பதில் கலந்து கூட குடிக்கின்றனர். இன்று தமிழ்நாடு, கேரளா, அந்தமான், ஆந்திரா, கர்நாடகாவில் 10 ரூ, 20 ரூ விலைக்கு நல்ல தரமான இளநீர் தேவையான அளவு கிடைக்கிறது. தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை, இந்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம், விவசாய பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி அத்தாரிட்டி ஆகியோரும், த.நா.வேளாண்மை பல்கலைக்கழகம் ஆலோசனை, உதவி, மானியம் தருகின்றன. நபார்டு வங்கியும், ஏற்றுமதி வளர்ச்சி வங்கியும் கடன் தருகின்றன. கீழ்கண்ட வலைதளம் பாருங்கள். www.tn.gov.in, www.tnau.ac.in, www.cdb.gov.in, www.apeda.com, www.nabard.org, www.exinbank.nic.in, www.nhb.gov.in.
- எம்.ஞானசேகர், 
தொழில் மற்றும் விவசாய ஆலோசகர்,
93807 55629
gnanam_nidco@yahoo.co.in

தொடாமலே ஒரு ஆபரேஷன்!


தொடாமலே ஒரு ஆபரேஷன்!

ஒரு டீ சாப்பிடும் நேரத்தில் நடந்து முடிந்துவிடுகிறது ஆபரேஷன். "அவ்வளவுதானா? ஊசி குத்தின மாதிரிகூட வலிக்கலியே' என நம்பமுடியாத ஆச்சரியத்துடன் வெளியேறிக் கொண்டிருந்தார் பெரியவர் ஒருவர்.
"இதுல ஊசியும் இல்ல. கத்தியும் இல்ல, அதுதான் ஸ்பெஷாலிட்டியே' என்று சிரித்துவிட்டு அடுத்த ஆபரேஷனுக்கத் தயாராகிறார் டாக்டர் விஜய்சங்கர். மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் மகன். சென்னையின் பிசியான கண் மருத்துவர். இப்போது கத்தியில்லாத கேட்ராக்ட் சர்ஜரி என்ற அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறார். "கம்ப்யூட்டர் கண்ட்ரோல்டு ஃபெம்டு செகண்ட் கேட்ராக்ட் சர்ஜரி' என்ற மிக மிக லேட்டஸ்ட்டான டெக்னாலஜி பற்றி டாக்டர் விஜய்சங்கரிடம் பேசினோம்.
"கட்ராதோஸ் என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து வந்ததுதான் கேட்ராக்ட் என்ற சொல். கட்ராதோஸ் என்றால் நீர்வீழ்ச்சி என்று அர்த்தம். நீர்வீழ்ச்சியில் நின்று கொண்டு எதைப் பார்த்தாலும் மங்கலாக தெரியுமல்லவா. அதுபோலத்தான் கேட்ராக்ட் வந்தவர் பார்வையும் தெளிவின்றி இருக்கும்' என்று எளிமையான விளக்கத்தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் விஜய் சங்கர்.
"நாம் பார்க்கும் காட்சிகள் கார்னியா எனப்படும் கருவிழி வழியாகச் சென்று அதற்கு உள்ளே இருக்கும் லென்ஸை ஊடுருவி ரெட்டினாவில் பிம்பமாக விழுந்தவுடன்தான் நமக்குப் பார்வை தெரிகிறது. நடுவில் இருக்கும் லென்ஸின் உள்ளே மெல்லிய சதை, திரைபோல வளரும்போது கண்பார்வை மங்கலாகும். பளிச்சென்ற நிறங்கள் கூட டல்லாகவே தெரியும். பைக், கார் ஓட்டுவது சிரமமாக இருக்கும். கண்ணாடி போட்டுக் கொண்டாலும் பார்வை தெளிவாகத் தெரியாது. இதுபோன்ற நேரத்தில் தான் கேட்ராக்ட் ஆபரேஷன் செய்யப்படுகிறது.
லென்ஸ் உள்ளே ஏற்படும் பிரச்னை என்பதால் கண்களில் ஊசி போட்டு, கத்தி வைத்து கட் செய்து லென்ஸை அகற்றப்படும். அல்லது உள்ளுக்குள்ளேயே லென்ஸை பீஸ்பீஸாக உடைத்து, அவை வெளியே உறிஞ்சி எடுக்கப்பட்டு புது லென்ஸை பொருத்தப்படும். இப்படித்தான் கேட்ராக்ட் ஆபரேஷன்கள் இன்று செய்ப்படுகிறது' என்றார் டாக்டர்.
"ஆனால் இன்று 10-15 நிமிடங்களில் கேட்ராக்ட் ஆபரேஷன் செய்யப்பட்டுவிடுகிறதே டாக்டர், கத்தியின்றி லேசர் மூலமாகத்தானே அது செய்யப்படுகிறது' என்ற நமது கேள்விக்கு தெளிவாக பதிலளித்தார் டாக்டர் விஜய் சங்கர்.
"இப்போது செய்யப்படுபவை லேசர் சர்ஜரியே கிடையாது. அவை கத்தியின் உதவியுடன் தான் செய்யப்படுகின்றன. நானும் அந்த ஆபரேஷன்களை இன்றும் நிறைய செய்துகொண்டுதான் இருக்கிறேன். கம்ப்யூட்டர் உதவியுட்ன செய்யப்படும் இநத ஃபைம்டு செகண்ட் கேட்ராக்ட் சர்ஜரி என்பதுதான் உண்மையான லேசர் சர்ஜரி. லேசர் கருவி மூலமாக கருவிழியில் தேவையான இடத்தில் இன்ஸர்ஷன் போட்டு கேட்ராக்ட்டை சுக்குநூறாக உடைத்து விட்டு பின்னர் புது லென்ஸ் பொருத்தப்படும். இந்த எல்லா வேலைகளையும் கம்ப்யூட்டரே செய்து விடும் என்பதே இதன் ஸ்பெஷாலிட்டி. கண்களில் கைப்படாமல் சர்ஜரி முடிந்துவிடும்' என்றார்.
எந்த புதிய டெக்னாலஜியும் வந்த புதிதில் காஸ்ட்லியாக இருக்கும் என்ற இயல்பு இந்த சிகிச்சை முறைக்கும் பொருந்தும். அதனால் நாளடைவில் சாமானியர்களும் இந்த அட்வான்ஸ்டு சேவையை பயன்படுத்திக் கொள்ளக்கூடிய அளவுக்கு கட்டணம் குறையும் என்பது டாக்டர்களின் நம்பிக்கை.

புதிய கருவியின் ப்ளஸ்
* இன்ஜக்ஷன் தேவையில்லை.
* தையல் போடவேண்டியதில்லை.
* கத்தி இல்லை, ரத்தம் இல்லை.
* ரிசல்ட் மிகமிகத் துல்லியமாக இருக்கும்.
* அறுவை சிகிச்சை முடிந்த 24 மணி நேரத்தில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம்.

Wednesday, August 26, 2015

ஆயத்த ஆடையில் சாதிக்கலாம்! 

ஆயத்த ஆடை வடிவமைப்பிற்கான பயிற்சிகளை பெறுபவர்களுக்கு, நல்ல வேலைவாய்ப்பு காத்திருப்பதாக கூறும், ஏ.டி.டி.சி.,யின் தென்மண்டல மேலாளர், நாகராஜன்: மத்திய அரசின் ஜவுளி துறையின் கீழ், ஏ.டி.டி.சி., எனும், ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையம் செயல்படுகிறது. சென்னையில், எழும்பூர் மற்றும் கிண்டியிலும், திருப்பூர், தர்மபுரி, பெரம்பலுார், பரமக்குடி, ஈரோடு, சேலம் என, இந்தியா முழுவதும், இதற்கான கிளைகள், 200 உள்ளன.ஓராண்டு டிப்ளமா படிப்பில், ஆடை தயாரிப்பு தொழில்நுட்பம், பேஷன் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், ஆடை தர நிர்ணயம், அப்பேரல் பேட்டர்ன் மேக்கிங் மற்றும் சி.ஏ.டி., போன்ற படிப்புகள் கற்று தரப்படுகின்றன. டிப்ளமா படிப்பை முடித்தவர்கள், மேலும் ஓராண்டு செலவிட்டு, 'அட்வான்ஸ்டு டிப்ளமா' படிப்பில் சேரலாம். இதற்கான கட்டணம், 26 ஆயிரம் ரூபாய்.ஆடை தயாரிப்பு தொடர்பான, ஆறு மாத கால சான்றிதழ் படிப்புகளும் உள்ளன. இப்படிப்பில், ஆடைகளுக்கான அடிப்படை டிசைன் மாதிரி உருவாக்கம், ஆடை தயாரிப்பு மேற்பார்வை மற்றும் தர கட்டுப்பாடு, ஆடை தயாரிப்பு தொழில்நுட்பம், ஆடை ஏற்றுமதி சந்தைபடுத்துதல், துணி வகைகள் சோதனை, ஆடை கட்டுமான தொழில்நுட்பம் என, பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.இப்பயிற்சியில் சேர விரும்புவோர், விண்ணப்ப கட்டணமாக, 150 ரூபாய் செலுத்தி, விண்ணப்பம் மற்றும் தகவல் குறிப்பேட்டை பெறலாம். இதற்கான பயிற்சி கட்டணம், 13 ஆயிரம் ரூபாய். பயிற்சி முடித்தவுடன், அரசு சான்றிதழ் வழங்குவதுடன், பிரபல ஆயத்த ஆடை நிறுவனங்களில், வேலையும் வாங்கி தருகிறோம். மேலும், சுய தொழில் செய்ய விரும்புவோருக்கு, அதற்கான வழிகளை எடுத்துரைக்கிறோம்.கல்லுாரி மாணவர் கள், இல்லத்தரசிகள், மகளிர் குழுக்காக, 30 முதல் 45 நாட்களுக்கான குறுகிய கால, 'ஸ்மார்ட் கோர்ஸ்'கள் வழங்குகிறோம். இதில், நவீன தையல் இயந்திரம் இயக்கும், 'டெய்லரிங்'கிற்கான ஆரம்ப நிலை பயிற்சி, ஸ்பெஷல் மிஷினை இயக்கும் அட்வான்ஸ்டு பயிற்சி, நவீன தையல் இயந்திர மெக்கானிக் பயிற்சி, எம்பிராய்டரி பயிற்சி என, பல பயிற்சிகள் உள்ளன.ஐந்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த, 16 வயது பூர்த்தியடைந்த ஆண், பெண் என, இருபாலரும், இதற்கான பயிற்சியில் சேரலாம். பயிற்சிக்கு தேவையான பாட புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் இலவசம். தினமும், மூன்று மணி நேரம் நடைபெறும் பயிற்சி வகுப்புகளுக்கு, பயிற்சி யின் தன்மைக்கு ஏற்ப, 1,200 முதல் 8,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.
பசுமை நண்பன் மோகன்தாஸ்

2 ஆண்டுகளாக கடையில் காய் வாங்கியதில்லை!
பசுமை நண்பன் மோகன்தாஸ்: சென்னை, முகலிவாக்கத்தைச் சேர்ந்தவன் நான். கிட்டத்
தட்ட இரண்டு ஆண்டு களாக, காய்கறி வாங்க, நாங்கள் கடைக்குப் போவதே கிடையாது.
தக்காளி, அவரைக் காய், உருளைக் கிழங்கு, வெண்டைக் காய், புடலங்காய், பூசணிக்காய், கத்தரிக்காய் என, எங்கள் மாடியிலேயே ஆர்கானிக் காய்கறிகளை வளர்த்து, சமைத்து சாப்பிடுகிறோம். பொதுவாக, மண்தொட்டியில் செடிகளை வைக்கும்போது, சீக்கிரம் உடைந்து விடுவதுடன், நீரால் எடையும் கூடும். அதற்கு மாறாக பிளாஸ்டிக் தொட்டிகளின் எடை குறைந்தாலும், மண் தொட்டிக்கு ஈடாக ஈரத்தை தக்க வைக்கும் தன்மை கிடையாது.இந்த சிக்கல்களுக்கு நண்பர்கள், இணையம் என, தீர்வு தேடியபோது தான், அற்புதமான அடுக்குத் தோட்டம் பற்றித் தெரிய வந்தது. உடனே அதை எங்கள் மொட்டை மாடியில் செயல்படுத்தி விட்டேன்.ஒரு குடும்பத்துக்கு, 4 - 6 அடுக்குகளைக் கொண்ட ஒரு அடுக்குத் தோட்டமே போதுமானது.ஒரு அடுக்குத் தோட்டத்தில், கிட்டத்தட்ட நமக்குத் தேவையான 20 காய்கறிகள், கீரை வகைகள், செடிகள்னு வளர்க்கலாம். 2க்கு 2 அளவு கொண்ட ஒரு அடுக்குத் தோட்டம் பரந்து விரிந்து வளர, 5க்கு 5 அளவு இடவசதி வேண்டும்.மேல் அடுக்கில் கேரட், பீட்ரூட், கத்தரிக்காய், தக்காளி போன்ற காய்கறி வகைகளையும், அதற்கடுத்த அடுக்குகளில் கீரை வகைகள், செடிகள், மூலிகைகள் என, நாம் விரும்பும் எதையும் வளர்க்கலாம்.பல அடுக்குகளைக் கொண்ட இந்த டவர் கார்டனின் அடியில், பல துளைகள் இடப்பட்ட ஒரு பேசின் இருக்கும். மற்ற முறைகளைப் போல அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஒருமுறை ஊற்றும் தண்ணீர், சொட்டு சொட்டாக பேசினில் உள்ள துளைகள் வழியாக வடிந்து, கீழே வைத்துள்ள பாத்திரத்தில் சேகரமாகும்.
பாத்திரத்தில் சேமிக்கப்பட்ட சத்து நிறைந்த அந்த தண்ணீரையே, மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால், தண்ணீரின் பயன்பாடு குறைவதுடன், எள்ளளவு சத்து கூட குறையாத காய்கறிகள் கிடைக்கும்.இவ்வாறு, எங்கள் தெருவில் உள்ள, 10 வீடுகளை மாடித் தோட்டமாக மாற்ற உத்வேகம் கொடுத்து, வீட்டுக்கொரு மரக்கன்றையும் நட்டு பாதுகாத்து வருகிறேன்.
தொடர்புக்கு: 93830 41899
தோட்டம் வளர்ப்பு 

தோட்டம் வளர்ப்பு பயனுள்ள பொழுதுபோக்கு! தர்மபுரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் மதுபாலன் மற்றும் கோவை மாடித் தோட்ட வல்லுனர், 'தோட்டம்' சிவா: காய்கறி தோட்டம் அமைப்போர், முதலில் கவனிக்க வேண்டியது, இடவசதி. மொட்டை மாடியில் அதிகளவு வெயில் அடிக்கிற மாதிரி இருந்தால், 'ஷேடு நெட்' எனப்படுகிற வலையைக் கொண்டு தோட்டம் அமைக்கலாம். மாடியில் தோட்டம் அமைக்கும்போது, தரையில், 'ஒயிட் வாட்டர் புரூப் பெயின்ட்' அடிப்பது நல்லது. முடிந்தளவு புதிய பொருட்களை வாங்காமல், வீட்டிலிருக்கும் மண் தொட்டி, பானை, வாட்டர் பாட்டில், பால் போடும் கிரேடுகள், பழைய வாளி, கெட்டியான பாலிதீன் பைகள், அரிசி சாக்கு ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். அதில், நீர் செல்ல சிறு துவாரம் இட வேண்டும். வீட்டுத் தோட்டம் அமைக்கத் தேவையான இடுபொருட்கள், விதைகள் அனைத்தும் இப்போது, எல்லா வேளாண், உரக் கடைகளிலும் கிடைக்கின்றன. ஆன் - லைன் மூலமாகவும் இவற்றைப் பெறலாம். விதைகள் வாங்கும்போது முடிந்தளவுக்கு உயர்ரக விதைகளாக அல்லாமல், நாட்டு விதைகளாக வாங்குவது நல்லது. இந்தப் பருவத்தில் தக்காளி, மிளகாய், பாகல், சுரை, பூசணி, பீர்க்கன், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை மற்றும் கீரை வகைகளை வளர்க்கலாம். கறிவேப்பிலை, முருங்கை, எலுமிச்சை மரங்களில் ஏதாவது ஒரு மரம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம். வெண்டை, கொத்தவரை, அவரை போன்ற பெரிய விதைகளை தேவையான இடைவெளி விட்டு, பாத்திகளில் நேரடியாகவே விதைக்கலாம். கத்திரி, தக்காளி, மிளகாய் போன்று சிறிய விதைகளை குழித்தட்டுகளில் வளர்த்து, பிறகு நடலாம். செடிகளின் அளவைப் பொறுத்து, 0.5 - 1 அடி வரை இடைவெளி விட்டு நட வேண்டும். கீரையில் வேர் அதிகம் கிடையாது என்பதால், ஒரு பிளாஸ்டிக் சாக்கை தரையில் விரித்து, மண் நிரப்பி கீரை வகைகளை வளர்க்கலாம். வேப்ப இலைகளை நன்கு காய வைத்து துாள் செய்து, செடி ஒன்றுக்கு ஒரு கைப்பிடி வீதம், செடியின் வேர்ப்பகுதியில் போட்டு நன்கு கொத்தி விட வேண்டும். இதுவே அடியுரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும். முட்டை ஓடு, மீன் தொட்டிக் கழிவுநீர், அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய நீரை கூட செடிகளுக்கு இடலாம்.
மாடித்தோட்டம் அமைப்பதன் மூலம் செடிகளில் நீராவிப் போக்கு நடைபெற்று, வெப்ப நிலையைக் குறைக்க வழி வகுக்கிறது. இதனால் செடிகளைக் கொண்டுள்ள கட்டடங்கள், இவை அல்லாத கட்டடங்களை விட குளிர்ச்சியாக இருக்கும். தோட்டம் வளர்ப்பு என்பது, பயனுள்ள பொழுதுபோக்கு மற்றும் உடற்பயிற்சி மட்டுமின்றி, மன அழுத்தத்தையும் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நமக்குத் தேவையான காய்கறிகளை, நாமே விளைவித்து சாப்பிடுவதில் கிடைக்கும் திருப்தியும், சந்தோஷமும் தனி தான்.