தொடாமலே ஒரு ஆபரேஷன்!
ஒரு டீ சாப்பிடும் நேரத்தில் நடந்து முடிந்துவிடுகிறது ஆபரேஷன். "அவ்வளவுதானா? ஊசி குத்தின மாதிரிகூட வலிக்கலியே' என நம்பமுடியாத ஆச்சரியத்துடன் வெளியேறிக் கொண்டிருந்தார் பெரியவர் ஒருவர்.
"இதுல ஊசியும் இல்ல. கத்தியும் இல்ல, அதுதான் ஸ்பெஷாலிட்டியே' என்று சிரித்துவிட்டு அடுத்த ஆபரேஷனுக்கத் தயாராகிறார் டாக்டர் விஜய்சங்கர். மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் மகன். சென்னையின் பிசியான கண் மருத்துவர். இப்போது கத்தியில்லாத கேட்ராக்ட் சர்ஜரி என்ற அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறார். "கம்ப்யூட்டர் கண்ட்ரோல்டு ஃபெம்டு செகண்ட் கேட்ராக்ட் சர்ஜரி' என்ற மிக மிக லேட்டஸ்ட்டான டெக்னாலஜி பற்றி டாக்டர் விஜய்சங்கரிடம் பேசினோம்.
"கட்ராதோஸ் என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து வந்ததுதான் கேட்ராக்ட் என்ற சொல். கட்ராதோஸ் என்றால் நீர்வீழ்ச்சி என்று அர்த்தம். நீர்வீழ்ச்சியில் நின்று கொண்டு எதைப் பார்த்தாலும் மங்கலாக தெரியுமல்லவா. அதுபோலத்தான் கேட்ராக்ட் வந்தவர் பார்வையும் தெளிவின்றி இருக்கும்' என்று எளிமையான விளக்கத்தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் விஜய் சங்கர்.
"நாம் பார்க்கும் காட்சிகள் கார்னியா எனப்படும் கருவிழி வழியாகச் சென்று அதற்கு உள்ளே இருக்கும் லென்ஸை ஊடுருவி ரெட்டினாவில் பிம்பமாக விழுந்தவுடன்தான் நமக்குப் பார்வை தெரிகிறது. நடுவில் இருக்கும் லென்ஸின் உள்ளே மெல்லிய சதை, திரைபோல வளரும்போது கண்பார்வை மங்கலாகும். பளிச்சென்ற நிறங்கள் கூட டல்லாகவே தெரியும். பைக், கார் ஓட்டுவது சிரமமாக இருக்கும். கண்ணாடி போட்டுக் கொண்டாலும் பார்வை தெளிவாகத் தெரியாது. இதுபோன்ற நேரத்தில் தான் கேட்ராக்ட் ஆபரேஷன் செய்யப்படுகிறது.
லென்ஸ் உள்ளே ஏற்படும் பிரச்னை என்பதால் கண்களில் ஊசி போட்டு, கத்தி வைத்து கட் செய்து லென்ஸை அகற்றப்படும். அல்லது உள்ளுக்குள்ளேயே லென்ஸை பீஸ்பீஸாக உடைத்து, அவை வெளியே உறிஞ்சி எடுக்கப்பட்டு புது லென்ஸை பொருத்தப்படும். இப்படித்தான் கேட்ராக்ட் ஆபரேஷன்கள் இன்று செய்ப்படுகிறது' என்றார் டாக்டர்.
"ஆனால் இன்று 10-15 நிமிடங்களில் கேட்ராக்ட் ஆபரேஷன் செய்யப்பட்டுவிடுகிறதே டாக்டர், கத்தியின்றி லேசர் மூலமாகத்தானே அது செய்யப்படுகிறது' என்ற நமது கேள்விக்கு தெளிவாக பதிலளித்தார் டாக்டர் விஜய் சங்கர்.
"இப்போது செய்யப்படுபவை லேசர் சர்ஜரியே கிடையாது. அவை கத்தியின் உதவியுடன் தான் செய்யப்படுகின்றன. நானும் அந்த ஆபரேஷன்களை இன்றும் நிறைய செய்துகொண்டுதான் இருக்கிறேன். கம்ப்யூட்டர் உதவியுட்ன செய்யப்படும் இநத ஃபைம்டு செகண்ட் கேட்ராக்ட் சர்ஜரி என்பதுதான் உண்மையான லேசர் சர்ஜரி. லேசர் கருவி மூலமாக கருவிழியில் தேவையான இடத்தில் இன்ஸர்ஷன் போட்டு கேட்ராக்ட்டை சுக்குநூறாக உடைத்து விட்டு பின்னர் புது லென்ஸ் பொருத்தப்படும். இந்த எல்லா வேலைகளையும் கம்ப்யூட்டரே செய்து விடும் என்பதே இதன் ஸ்பெஷாலிட்டி. கண்களில் கைப்படாமல் சர்ஜரி முடிந்துவிடும்' என்றார்.
எந்த புதிய டெக்னாலஜியும் வந்த புதிதில் காஸ்ட்லியாக இருக்கும் என்ற இயல்பு இந்த சிகிச்சை முறைக்கும் பொருந்தும். அதனால் நாளடைவில் சாமானியர்களும் இந்த அட்வான்ஸ்டு சேவையை பயன்படுத்திக் கொள்ளக்கூடிய அளவுக்கு கட்டணம் குறையும் என்பது டாக்டர்களின் நம்பிக்கை.
புதிய கருவியின் ப்ளஸ்
* இன்ஜக்ஷன் தேவையில்லை.
* தையல் போடவேண்டியதில்லை.
* கத்தி இல்லை, ரத்தம் இல்லை.
* ரிசல்ட் மிகமிகத் துல்லியமாக இருக்கும்.
* அறுவை சிகிச்சை முடிந்த 24 மணி நேரத்தில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம்.
No comments:
Post a Comment