Wednesday, August 26, 2015

ஆயத்த ஆடையில் சாதிக்கலாம்! 

ஆயத்த ஆடை வடிவமைப்பிற்கான பயிற்சிகளை பெறுபவர்களுக்கு, நல்ல வேலைவாய்ப்பு காத்திருப்பதாக கூறும், ஏ.டி.டி.சி.,யின் தென்மண்டல மேலாளர், நாகராஜன்: மத்திய அரசின் ஜவுளி துறையின் கீழ், ஏ.டி.டி.சி., எனும், ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையம் செயல்படுகிறது. சென்னையில், எழும்பூர் மற்றும் கிண்டியிலும், திருப்பூர், தர்மபுரி, பெரம்பலுார், பரமக்குடி, ஈரோடு, சேலம் என, இந்தியா முழுவதும், இதற்கான கிளைகள், 200 உள்ளன.ஓராண்டு டிப்ளமா படிப்பில், ஆடை தயாரிப்பு தொழில்நுட்பம், பேஷன் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், ஆடை தர நிர்ணயம், அப்பேரல் பேட்டர்ன் மேக்கிங் மற்றும் சி.ஏ.டி., போன்ற படிப்புகள் கற்று தரப்படுகின்றன. டிப்ளமா படிப்பை முடித்தவர்கள், மேலும் ஓராண்டு செலவிட்டு, 'அட்வான்ஸ்டு டிப்ளமா' படிப்பில் சேரலாம். இதற்கான கட்டணம், 26 ஆயிரம் ரூபாய்.ஆடை தயாரிப்பு தொடர்பான, ஆறு மாத கால சான்றிதழ் படிப்புகளும் உள்ளன. இப்படிப்பில், ஆடைகளுக்கான அடிப்படை டிசைன் மாதிரி உருவாக்கம், ஆடை தயாரிப்பு மேற்பார்வை மற்றும் தர கட்டுப்பாடு, ஆடை தயாரிப்பு தொழில்நுட்பம், ஆடை ஏற்றுமதி சந்தைபடுத்துதல், துணி வகைகள் சோதனை, ஆடை கட்டுமான தொழில்நுட்பம் என, பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.இப்பயிற்சியில் சேர விரும்புவோர், விண்ணப்ப கட்டணமாக, 150 ரூபாய் செலுத்தி, விண்ணப்பம் மற்றும் தகவல் குறிப்பேட்டை பெறலாம். இதற்கான பயிற்சி கட்டணம், 13 ஆயிரம் ரூபாய். பயிற்சி முடித்தவுடன், அரசு சான்றிதழ் வழங்குவதுடன், பிரபல ஆயத்த ஆடை நிறுவனங்களில், வேலையும் வாங்கி தருகிறோம். மேலும், சுய தொழில் செய்ய விரும்புவோருக்கு, அதற்கான வழிகளை எடுத்துரைக்கிறோம்.கல்லுாரி மாணவர் கள், இல்லத்தரசிகள், மகளிர் குழுக்காக, 30 முதல் 45 நாட்களுக்கான குறுகிய கால, 'ஸ்மார்ட் கோர்ஸ்'கள் வழங்குகிறோம். இதில், நவீன தையல் இயந்திரம் இயக்கும், 'டெய்லரிங்'கிற்கான ஆரம்ப நிலை பயிற்சி, ஸ்பெஷல் மிஷினை இயக்கும் அட்வான்ஸ்டு பயிற்சி, நவீன தையல் இயந்திர மெக்கானிக் பயிற்சி, எம்பிராய்டரி பயிற்சி என, பல பயிற்சிகள் உள்ளன.ஐந்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த, 16 வயது பூர்த்தியடைந்த ஆண், பெண் என, இருபாலரும், இதற்கான பயிற்சியில் சேரலாம். பயிற்சிக்கு தேவையான பாட புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் இலவசம். தினமும், மூன்று மணி நேரம் நடைபெறும் பயிற்சி வகுப்புகளுக்கு, பயிற்சி யின் தன்மைக்கு ஏற்ப, 1,200 முதல் 8,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

No comments: